ஆலோசனை!
நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை
செயல்படுத்த...கடலில் கலக்கும்
வெள்ள நீரை சேமிக்க அசத்தல் திட்டம்
நதிகளை இணைத்து, தேசிய நீர் வழி போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும்,நீர்வழி,போக்குவரத்தை, செயல்படுத்த, ஆலோசனை!
கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 30 நதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை, 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பதினைந்தாயிரம் கி.மீ., நீள, கால்வாய் கட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் இடையே, தண்ணீரை சேமித்து வைக்கும் ஏரிகள் போன்ற, 3,000 நீர் நிலைகளை உருவாக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதல்கட்டமாக, கென் - பெட்வா, தமங்கங்கா - பிஞ்ஜால், பர் தபி - நர்மதா, மகாநதி - கோதாவரி, மனஸ் - சங்கோஷ் தீஸ்டா - கங்கை ஆகிய நதிகளை, இணைக்கும் திட்டம், வரும் டிசம்பரில் துவக்கப்பட உள்ளது.
எதிர்ப்பு
நதிகளை இணைத்தால், தங்களின் நீராதாரம் பாதிக்கும் என கருதுவதால், இந்த திட்டத்துக்கு, சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், மதுரையை சேர்ந்த, பேராசிரியர், ஏ.சி.காமராஜ் முன்வைத்த, நீர்வழி போக்குவரத்து திட்டம், பல மாநில
அரசுகளின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, திட்டம் சிறப்பாக உள்ளதாக, காமராஜுக்கு, பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ஆர்வம்
காமராஜின், நீர்வழி திட்டத்தை அமல் படுத்துவ தோடு, நீர் வழிப்பாதைகளில், போக்கு வரத்தை செயல்படுத்தவும், அமைச்சர் நிதின் கட்கரி ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
தென்னக நதிகளில் நீர்வழி போக்குவரத்து
மதுரையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ், நதிகள் இணைப்பிற்கான, மத்திய அரசு நிபுணர் குழுவில், உறுப்பினராக உள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள நதிகளை, சிறப்பான வகையில் பயன்படுத்த, தென்னக நதிநீர் போக்குவரத்து திட்டத்தை, காமராஜ் முன்வைத்துள்ளார்.இதுகுறித்து, காமராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில், எந்த மாநிலமும், நீர் இன்றி கஷ்டப்பட கூடாது என்பதே, என் நோக்கம். அதற்காக, நீடித்து நிலைக்கத்தக்க, நீர் பகிர்மான திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்துக்கும், தேசிய நீர்வழி போக்குவரத்து திட்டத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன.
நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.ஆனால், நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதால், அனைத்து மாநிலங்களுக்கும், பல்வேறு பலன்கள் கிடைக்கும்.நதிகள் இணைப்பு திட்டத்தால், 3.5 கோடி ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மாறாக, நீர்வழி போக்குவரத்து திட்டத்தால், நாடு முழுவதும், ஆறு கோடி ஹெக்டேர் விவசாய நிலம் பாசனம் பெறும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தால்,
60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு காமராஜ் கூறினார்.
எதிர்ப்பு இருக்காது!
மழை, வெள்ள நீரை பயன்படுத்துவது குறித்து, காமராஜ் கூறியதாவது:
நதி இணைப்பு திட்டம், ஒரு திசை நோக்கி செயல்படும். மாறாக, நீர் வழி போக்குவரத்து திட்டம், இரு திசை நோக்கி செயல்படும். இந்த திட்டம் மூலம், மழை, வெள்ளத்தால், ஆண்டுதோறும் வீணாகி வரும், 1,500 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றினால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். 2,000 கி.மீ., நீள, நீர்வழி போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்.
ஆண்டுதோறும், கோதாவரி நதி நீர் மட்டும், 3,000 டி.எம்.சி., கடலில் கலந்து வீணாகிறது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் தண்ணீர் தேவை, இதில், 25 சதவீதம் மட்டுமே. நதிகள் ஓடும் மாநிலங்களில், அவற்றின் பயன்பாட்டுக்கு அதிகமான நீர் மட்டுமே சேகரிக்கப்படுவதால், இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதில், எந்த மாநிலத்துக்கும் சிரமம் இருக்காது.இவ்வாறு காமராஜ் கூறினார்.
- மோடி ஒழிக . . .
கூவுங்க நடுசெண்டர் நக்கிகளே . . .
மோடியும் அவர்தம் 100 ஐஏஎஸ் அதிகாரிகளும்
உங்களுக்கும் உங்கள் முன்னேற்றத்துக்கும் தலைமுறைக்கும் சேர்த்துதான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.