Wednesday, May 15, 2019

ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது.

**திருவாலங்காடு*
#Suryatrust 
#Sundarji

ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது. அந்த ஆலயம், திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
*திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில்*
மகப்பேறு என்பது ஒரு சிலருக்கு பெரும் கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது.
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லை என்றால் அந்த வாழ்க்கை முழுமை பெறாது.
திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும் அபிராமி பட்டர் கூட, “கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும் வேண்டும்” என்கிறார்.
எது தவறினாலும் சந்தானம் என்னும் குழந்தை பாக்கியம் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது குழந்தைச் செல்வம்.
சிலருக்கு உடனடியாக புத்திரப் பேறு கிடைத்து விடும்.
ஆனால் ஒரு சிலருக்கு அது அமைய வெகு காலம் ஆகிவிடும்.
அதிலும் தற்போது இருக்கும் உணவு பழக்கங்கள், மன அழுத்தம், இறுக்கமான உடைகளை அணிவது, மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்துவது, இரவு நேர வேலை, வேலைப்பளுவினாலும், கர்ம வினைகளாலும், சாபங்கள், தோஷங்களினாலும் புத்திரப்பாக்கியம் கிடைக்க தாமதம் ஆகும்.
இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதுதான்.
ஆனால் ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது.
அந்த ஆலயம், திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்டத் திருக்கோவில் இதுவாகும். மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவாலங்காடு அமைந்துள்ளது.
இங்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் புத்திர காமேஸ்வர தீர்த்தம் ஆகும்.
இந்த தீர்த்தத்தில் நீராடி இத்தல ஈசனையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்து அதிதி தேவர்களையும், இந்திரன் தன் மகன் ஜெயந்தனைப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.
பரதன் எனும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தைப்பாக்கியம் இல்லாமல் வருந்தினான்.
இதனால் அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை சமேத சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டு தவம் மேற்கொண்டான்.
தவத்திற்கு இரங்கிய ஈசன் அசரீரியாக, “பரதா! அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிேஷகம், அர்ச்சனை செய்து பசுநெய்யைக் கருவறைத் தீபத்தில் சேர்த்து வழிபட்டு வா.
நிச்சயம் புத்திரப் பாக்கியம் கிடைக்கும். பங்குனி மாத அமாவாசை தினத்தில் இங்கு வந்து நீராடி எம்மை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார்.
பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காகக் காத்திருந்து திருவாலங்காடு வந்து, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.
இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன்கள் உள்ளனர். இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை, சிறிது சேதமானதால் புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர்.
புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக “உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால் அவர்களை வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?” எனக் கேட்க, பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.
இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்றவாறு அருள்பாலிக்கிறாள்.
அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறைத் தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.
இத்தலத்தின் பழைய அம்மனும் உயிரோட்டமானவள். எனவே மூலவர் வண்டார்குழலி அம்மனுக்கு செய்யும் அனைத்து உபசாரங்களையும் அந்த அம்பாளுக்கும் செய்து வரவேண்டும் என்கிறார்கள்.
பழைய வண்டார்குழலி அம்மன் அருகில் தனிச் சன்னிதியில் சரஸ்வதி அம்மன் உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம், பஞ்சமி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர்.
இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி- தெய்வானை சமேத முருகர் சன்னிதிகளும் உள்ளன.
இத்தல மூலவர் வடாரண்யேஸ்வரர் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பது, இத்தலம் மிகச்சிறந்த பரிகாரத் திருத்தலம் என்று கட்டியம் கூறி நம்மை அழைக்கிறது.
இத்தல வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் வழிபாட்டின் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள பைரவருக்கு அமாவாசை, அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு, வெள்ளியில் சிறிய நாய் காசு செய்து அதனைக் கருப்பு கயிற்றில் கட்டி தாயத்து செய்கிறார்கள்.
அதனை புத்திரகாமேஸ்வரர், பைரவர் காலடியில் சமர்ப்பித்து பின்பு அதனை எடுத்து குழந்தைகளுக்கு அணிவித்து விட்டால் குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷங்கள் அண்டாது என்கிறார்கள்.
புத்திரபாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச்சிறப்பான நாள், பங்குனி மாத அமாவாசைதான்.
அன்றைய தினம் இங்கு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம்.
பங்குனி மாத அமாவாசை அன்று இங்குள்ள புத்திரகாமேஸ்வரர் சன்னிதியில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது.
புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் ஈசனுக்கு தீர்த்தவாரியும் நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் இந்த இறைவனை வழிபட்ட பிறகு, அருகில் உள்ள திருவாவடுதுறை ஒப்பிலாமுலைநாயகி உடனுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ‘புத்திர தியாகேசர்' சன்னிதியில் வழிபட்டு பிரார்த்தனையை நிறைவு செய்யவேண்டும். அதன் மூலம் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment