Wednesday, September 17, 2014

அகத்தியர்

நாகப்பாம்பினை கட்டும் மந்திரம்
விலங்கின வகைப் பட்டியியலில் "நாஜா" என்கிற பிரிவில் "எலாப்பிடே" என்ற குடும்பத்தைச் சேர்ந்தது நாகப் பாம்பு. இவை பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. மிகவும் கொடிய நஞ்சுடைய இந்த பாம்பு நல்ல பாம்பு என்றும் அழைக்கப் படுகிறது. இவை தீண்டினால் மரணம் நிகழும் வாய்ப்புள்ளது. 

இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை வாழ்ந்த நம் முன்னோர்கள் இத்தகைய விலங்குகளை துன்புறுத்தாமலும், அதே நேரத்தில் அவற்றினால் தமக்கு எவ்வித பாதிப்பும் நேராதவகையில் பல்வேறு உத்திகளை கைக் கொண்டிருந்தனர். அவை பற்றி முன்னரே பல தகவல்களை பகிர்ந்திருக்கிறேன்

அந்த வகையில் இன்று நாகப்பாம்புகளை மந்திரத்தால் கட்டும் ஒரு முறையினை பார்ப்போம். இந்த மந்திரத்தை உபயோகித்தால் நல்ல பாம்பு  நம்மை தீண்டாமல் விலகிச் சென்றுவிடுமாம். நம்புவதற்கு அரிதான இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

இந்த மந்திரம் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....

கேட்டவுடன் வந்தவகை சொல்வேனம்மா
கெம்ப்பீர மானதொரு நாகந்தானும்
நாட்டமுடன் கண்டமுடன் பணிந்துநிற்க
நற்வசன மானதொரு மந்திரந்தான்
தேட்டமுடன் சொல்லுமென்று கேட்டேனப்பா
திருவான முகமலர்ந்து தீர்க்கமாக
தாட்டிகமாய் நறீசிம்மறீசிங்கென்று
தன்னிலையிற் தானிருந்து உருவே செய்யே.

செய்யடா உறுதியுட னாயிமுருவேசெய்ய
தீர்க்கமுடன் மந்திரந்தான் சித்தியாகும்
மெய்யடா பத்தியுடன் சித்தியானால்
வெருண்டெழுந்த நாகமடா அரண்டேநிற்கும்
தொய்யவே அரண்டதொரு நாகந்தன்னை
சுத்தமுடன் பார்த்துநீ சீஊவென்றால்
பய்யடா அந்தரவு நகண்டுநல்ல
பத்தியுட னோடிவிடும் பாருபாரே.

முதலில்  குருவை வணங்கி மனதை ஒரு முகப் படுத்தி  "நறீ சிம் மறீ சிங்" என்கிற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்து, இந்த மந்திரத்தில் சித்தியடைய வேண்டும். இத்தகையோரை  நாக பாம்பு தீண்ட வந்தால், அந்த பாம்பினை நோக்கி "சீஊ" என்ற மந்திரத்தை உச்சரிக்க அந்த பாம்பானது தீண்டாது ஓடிப் போய்விடும் என்கிறார். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர். 

இம் மாதிரி பல ஆச்சர்யமான தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.

No comments:

Post a Comment