Thursday, August 7, 2014

பிரச்சனைகள்

பிரச்சனை என்றால் என்ன? அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா? நிச்சயமாக கிடையாது. மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது. ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை. ஒரு உதாரணம் இங்கு கொடுக்க விரும்புகிறேன். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டில் இருந்து வெளியேறும் அசுத்த தண்ணீரை உங்கள் வீட்டு வாசல் வழியாக விடுகின்றார் என்று வைத்து கொள்வோம். அசுத்த தண்ணீரை பார்த்தவுடன் என்னடா இது காலை அசுத்தமான தண்ணீரில் வைக்க வேண்டியுள்ளதே, இது என்ன பெரிய பிரச்சனையாக இருக்கும் போல் இருக்கிறதே என வரிந்து கொண்டு பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் சண்டைக்கு நின்றீர்கள் என்றால் அப்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. நீங்கள் ஒன்று சொல்ல, அவர் ஒன்று சொல்ல, அது கை கலப்பில் வந்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விடுகிறது. அதே நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்ளாமல் சம்பந்தப்பட்ட பக்கத்து வீட்டு காரரிடம் அசுத்த தண்ணீரால் விளையும் சுகாதார கேடுகளை பற்றி சொல்லி இனி தண்ணீரை உங்கள் வீட்டு வாசல் வழியாக வராமல் அதே சமயத்தில் வேறு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மாற்று வழியை ஏற்பாடு பண்ண சொல்லலாம். நல்ல விதமாக அவர் மேற்கொண்டு அசுத்த தண்ணீரை விடாமல் இருந்தால் சந்தோசம். அறிவுரை சொல்லியும் அவர் தொடர்ந்து தன் தவறை திருத்தி கொள்ளாமல் இருந்தால், சுகாதார துறை, காவல் துறை, சட்டம் போன்ற வழிகளில் அணுகி அந்த நிகழ்வுக்கு தீர்வு காணலாம். அதை விடுத்தது அந்த நிகழ்வை பிரச்சனையாக கருதினால் ஒரு பிரச்னை போய் மற்றோர் பிரச்னை உருவாகும். எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும். நம்ப வில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும். அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்று கொண்டால் அங்கு பிரச்னை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அமைதியாக ஏற்று கொள்ளும்போது உணர்சிகளுக்கு இடமில்லை. உணர்ச்சிகள்தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடுகிறது. இதில் கோபத்திற்கு முக்கிய பங்குண்டு. சாதாரண நிகழ்வையே இந்த கோபம் பெரிய பிரச்சனையாக்கி விடும். ஆனால் அன்பு என்பது எரிந்து கொண்டு இருக்கும் தீயை அணைக்கும் தண்ணீரை போன்று நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே மாற்ற செய்யும் சக்தி உண்டு. கணவன் மனைவியரிடையே நடக்கும் ஒரு சாதாரண பேச்சு வார்த்தை கூட சமயத்தில் பெரிய பிரச்சனையை உண்டாகி விடும். அவர்களுடைய வாழ்க்கையையே கேள்வி குறியாக்கி விடும். காரணம் பேச்சின் உண்மையான அர்த்தத்தை தவறாக எடுத்துக்கொண்டு அதை ஒரு பிரச்சனையாக்கி விடுவது தான். உணர்ச்சிவசபடும்போதுதான் ஒருவருடைய சிந்தனை சக்தி அடைபட்டு விடுகிறது. தப்பு தப்பாக சிந்தனை செய்ய வைக்கும். சாதாரண விஷயத்தை கூட ஒரு பிரச்சனையாக எடுத்துகொள்ள செய்து விடும். இன்று சிறைச்சாலையில் தண்டனைகளை அனுபவித்து கொண்டு இருக்கும் கைதிகள் தப்பு செய்வதற்கு முன்பு உணர்ச்சிவச பட்டு தவறை செய்து விட்டு அதன் பின்பு ஜெயில் கம்பிகளுக்கு உள்ளே ஐயோ தப்பு செய்து விட்டு என் குடும்பத்தை இழந்துவிட்டேன், என் சந்தோசத்தை இழந்து விட்டேன் என்று புலம்பி பிரயோசனம் இல்லை. எந்த ஒரு நிகழ்வையும் அறிவு பூர்வமாக அணுகும்போது அங்கு பிரச்னை என்பதற்கு இடம் இல்லை. இதற்க்கு தியானம் போன்ற அறிவு சார்ந்த பயிற்சிகள் உதவி புரியும். தியானம் என்பது ஒருவருடைய அறிவை ஒழுங்குபடுத்துவது என்றால் மிகை இல்லை. அறிவை ஒழுங்குபடுத்தும்போது எந்த ஒரு நிகழ்வையும் அறிவு பூர்வமாகத்தான் அணுக செய்யும். உணர்சிகளுக்கு அங்கு இடம் இல்லை. அன்பு மற்றும் அறிவுக்கு மட்டும்தான் தியானம் வழி வகுக்கும். தியானம் எந்த ஒரு விசயத்துக்கும் தீர்வு காண உதவும் தகவல்களை விருப்பு வெறுப்பு இன்றி அறிவு பூர்வமாக சேகரிக்க செய்யும். அது சம்பந்தமான புத்தகங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை நாட செய்யும். தியானம் என்பது தகவல்களை அறிவு பூர்வமாக பெற செய்து ஒரு நிகழ்வை நிகழ்வாக தான் இருக்க செய்யுமே ஒழிய அதை ஒரு பிரச்சனையாக நினைக்க செய்யாது என்பதில் சந்தேகம் இல்லை.  சரி 
பார்ப்போம்
அருணகிரி

No comments:

Post a Comment