Tuesday, November 12, 2019

”வளி, அழல், ஐயம்”

விரிவான மருத்துவ விளக்கம்

முத்தாது !

என்னாது முத்தாது ? பைத்தியம் முத்தாது?

இல்லே. மூனு தாது; முத்தாது !

வாதம், கபம், சிலேத்துமம் ... என்பவை முத்தாதுக்கள்.

”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்?"

"ஒருவேளை பயலுக்கு ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ?"

"நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் பாட்டி தாத்தாக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோமா ?

”வாதம், பித்தம், கபம்”

அல்லது

”வளி, அழல், ஐயம்”

ஐயம் என்பது தான் ஐயனார் ஆக வழிவகுக்கிறது.

ஐயன் வள்ளுவன் என்று சொல்வதற்கும் இந்த ஐயம் என்கிற கபம் மூலமாயிற்று.

உடலுக்கு உயவுத்தன்மை ஏற்படுத்த lubrication oil தான் கபம். இது ஒரு குறிப்பிட்ட நீர்ம தன்மையில் இருந்தால்தான் உகந்தது. அதை விட்டுட்டு ரொம்ப dilute ஆயிடுச்சி'னால் - நோய், ரொம்ப அடர்த்தியாப் போச்சினாலும் - நோய்.

இந்த கபத்தின் மூலக்கூறுகள் குறிப்பிட்ட கலவை இல்லாம வேற வேற மூலப் பொருள்கள் சேர்ந்து ... உருவாகிப் போச்சினா - நோய். கபத்தின் ஓட்டம் சீராக இருந்தால் ஆரோக்கியம். எங்கெங்கே இருக்கணுமோ ... உடம்புல அந்தந்த பகுதியிலே இருக்கணும் ... வேற எங்கேயோ போய் சிக்கிகிட்டு கெடந்தாலும் - நோய்.

முத்தாது ... திரிதோஷம்.

வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் கவனிச்சுக்கும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது.

கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும், நெய்ப்புத் தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது.

இந்த வாதம், பித்தம், கபம் - மூனும் சேர்ந்து கூட்டாக நல்லா வேலை பண்ணினாத்தான் ... ஒடம்பு ஒடம்பா இருக்கும்.

இல்லாட்டி என்னாகும் ?

பாரந்தேங்.

ஒழுங்கா வச்சிக்கறது நம்ம கையிலயா இருக்கு?

ஆமாம்; உணவு நல்ல உணவையும், மனசை வெள்ளை மனசாகவும் வச்சிக்கணும். அப்படி செஞ்சா முத்தாதுக்களால் வர்ற நோய் முத்தாது !

ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளது என்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை உட்டு  ஒழிச்சிடணும்.

புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக் காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள் ... இதெல்லாம் ... செரிமானத்திற்கு சிரமம் தரும்;  மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும்.

மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவு வகைகளைக் கூடியவரை தவிர்க்க வேண்டும்.

வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும்.

அல்சர், இரத்தக் கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம்.

ஆளாப் பறக்கறோமே? நிதானம்'ங்கறது கொஞ்சங் கூட கெடையாது. அப்புடி இருந்தாக்க ...

பித்தத்தை ... தூ...க்கி  உட்டுடும்.

பித்தம் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயை குறைக்க வேண்டும். கோழிக் கறி கூடவே கூடாது. கோதுமையைக்கூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டும்.

கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சனில் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரணமாய்ச் சொல்கிறோம். அளவுக்கு அதிகமான மனப்பழு, மன அழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகும்.

சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய.

பால், இனிப்புகள், நீர்க்காய் கறிகளான தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.

மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும்.

முன்னாடி காலத்துலே ஏது ஸ்டெத் என செல்லமாக கூப்பிடற ஸ்டெதஸ்கோப் ?

நாடியைப் பாத்துதான் நோயைக் கண்டு பிடிச்சாங்க.

நாடி புடிச்சி பாத்தாக்க என்னத்தைச் சொல்லும்.

அட, வாதம், பித்தம், கபத்தைச் சொல்லும் !

உடலில் உயிர் தங்கி இருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ ... அதுவே நாடி அல்லது தாது எனப்படும்.

நாடிகள் 72000. அவற்றில் முக்கியமானவை பத்து. அந்த பத்தில் நம்மை மேல் நிலைக்கு இட்டுச் செல்பவை மூன்று.

1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.

2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.

3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.

4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.

5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.

6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.

7. அசனி – வலது காதில் நிற்கும்.

8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.

9. சங்குனி – குறியில் நிற்கும்.

10. குகு – அபானத்தில் நிற்கும்

கரு உருவாகும் போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றுகிற நாடிகள் பத்து ஆகும். இதில் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய நாடிகள் சிறப்பானவை.

 நாடிகளை ஆராயும்போது, கையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்க, முதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும், இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும், மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.

"காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்

பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்

மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்''

பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும், அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும், மாலை பத்து நாழிகை கபம் என்னும் ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும்.

அதேபோல், சூரியன் மறைந்தவுடன் முன்னிரவு பத்து நாழிகை வாதமும், அதன் பின் நள்ளிரவு பத்து நாழிகை பித்தமும், பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர்.

வாதம் பகலும் இரவும் 6 - 10 மணி

பித்தம் பகலும் இரவும் 10 - 2 மணி

கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 - 6 மணி

என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்து அறியப்பட்டுள்ளன.

இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் மந்தம் ஆனாலோ, மாறுபட்டாலோ நமக்கு நோயோ, மரணமோ ஏற்படும் என்று  உணர்த்தப் படுகிறது.

"கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்

கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்

விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்

விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்

திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்

சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்

நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்

நலமாக மாதமுதல் நடக்குங் காணே.''

கடகம் முதல் துலாம் வரை (ஆடிஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனிஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகை மாசி) ஐயம் வளர்ச்சி பெறும்.

"சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்

அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்

மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி

வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே''

"தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்

மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்

தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று

நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.''

சித்திரை வைகாசியில் உதயத்திலும் ...

ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகையில் நண் பகலிலும் ...

மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலை ஏற்பாட்டு வேளையிலும் ...

பங்குனி ஆவணி யில் இரவில் நாடி கணிக்க உரிய நேரமாகும்

தட்ப வெப்ப நிலை, கால வேளைகளுக்கு ஏற்ப ... நாடிகளின் இயக்கமும் அமைந்திருக்கும்

வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு.

"சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி

தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி''

என்றதனால், ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும், சிறு விரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி .

“நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’’

நன்கு ஆராயுமிடத்து வாத, பித்த, ஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப் படும் நாடி பூதநாடி!

மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகவும், அத்துடன் கூடவே பூதநாடியும் நடக்கிறவனுக்கு சாவு என்பதே இல்லை. அதனால் அவன் காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.
பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்றும், பேர் உறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள் என்பதிலிருந்து, நாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது

"சாவில்லை சாகாம லிருக்கலாகும்

சாத்தியத்தில் குணங்களப்பா யிதுகளெல்லாம்

சாவில்லை நோயில்லை வறுமையில்லை"
----------
செப்படு வித்தை.

No comments:

Post a Comment