எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
உலோகத் தகட்டில் கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் கீறப்படும் இந்த யந்திரங்கள் சூட்சுமமான பல அர்த்தங்களை தன்னகத்தே கொண்டவை.இந்த யந்திரங்களை உயிர்ப்பிக்க மந்திரங்கள் அவசியம் ஆகிறது. மந்திரங்களினால் உயிர்ப்பிக்கப் படும் யந்திரங்கள் சக்தி கேந்திரமாய் விளங்குகின்றன.யந்திரம் மற்றும் அதை உயிர்ப்பிக்கும் மந்திரம் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து தெளிவதையே தந்திரம் என்கிறோம்.
இத்தகைய யந்திர வழிபாட்டினைப் பற்றிய தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் அகத்தியர் அருளிய "சண்முக யந்திரம் " பற்றிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தகவல் "அகத்தியர் 12 000 " என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பாரப்பா சண்முகனார் பூசைகேளு
பத்தியுடன் முக்கோணம் பதிவாய்ச் செய்து
நேரப்பா அறுகோணந் தன்னிலேதான்
நிசமான ஓம்மென்றே நன்றாய்ப்போடு
காரப்பா அதனிடையின் வெளியிலேதான்
கருணையுடன் சரவணபவா வென்றேதான்
சேரப்பா அட்சரத்தை நாட்டிக்கொண்டு
சிவசிவா அதனைச் சுற்றி ஓம்போடே.
போடப்பா சுற்றியே ஓங்காரம்போட
நன்மையுள்ள சக்கரமுஞ் சித்தியாச்சு
வீடப்பா பிலப்பதற்கு சக்கரத்தைச்சுத்தி
விருத்தமென்ற வளையமடா மூன்றுபோடு
கோடப்பா கீற நன்றாயக் கோட்டைபோட்டு
குறிப்பாக நால்வாச லிட்டுக்கேளே.
கேளப்பா வாசலிற் தேவதையைக்கேளு
கீழ்வாசலில் பிரமனுட பீஷம்போடு
தாளப்பா தென்வாசல் மாலின்பீஷம்
தயவான மேல்வாசல் ருத்திரபீஷம்
வாளப்பா வடவாசல் மயேசன்பீஷம்
மைந்தனே வாசலிலே தேவதைகள்நாட்டி
ஆளப்பா சதாசிவன்போல் நீயிருந்துகொண்டு
அன்பாகச் சக்கரத்தைப் பூசைசெய்யே.
செய்யப்பா பூசைவிதி தன்னைநன்றாய்
செப்பமுடன் செய்வதற்குத் திருவைநோக்கி
கையப்பா கால்முகங்கள் சுத்திசெய்து
கருரணைபெற விபூதியுத் தளமாய்ப்பூசி
வையப்பா சக்கரத்தைப் பீடமீதில்
மார்க்கமுடன் தானிருத்தி வைத்துமேதான்
மெய்யப்பா தூபமொடு தீபஞ்செய்து
வேதாந்தப் புருவமதில் சிம்மென்றுநில்லே.
நில்லப்பா மனதறிவால் வணக்கமாக
நினைவாகப் சண்முகர்க்குப் பூசைசெய
சங்கையுடன் ஓம்கிலி சிம்மென்றோதே
ஒமெனவே சண்முகர்க்குப் பூசைசெய்து
சோல்லப்பா மூலமென்ற அக்கினியினாலே
சிவசிவா புருவநடுக் கமலம்நோக்கி
நல்லப்ப நல்மனதாய் நோக்கமானால்
நாதாந்த சண்முகனார் தெரிசனையாம்பாரு.
பாரப்பா யோகபூசை அறிவானந்தம்
பதிவான தீபமென்ற மனக்கண்பார்வை
நேரப்பா வாசியென்ற அமுதபானம்
நிலையான பிர்மமாமாயே மாய்கைமாழும்
கருவான சூட்சமடா நாதவித்து
காத்து மனக்கண்ணாலே தன்னைக்காணே
அட்டாங்க யோகமுடன் மௌனயோகம்
அட்டசித்து னித்தனையு மறியலாச்சே.
இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான சில முன்னெடுப்புகளும், முறைகளும் உண்டு. அதன்படியே அவற்றினை கீறிட வேண்டும்.
இந்த யந்திரத்தினை ஆறங்குல (6"x6") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கீறிய தகட்டினை, பீடம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் கிழக்கு முகமாய் அமர்ந்து மனதை ஒரு முகமாக்கி, குருவை பணிந்து "ஓம்கிலி சிம்" எனும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டுமாம்.
தொடர்ந்து இம்மாதிரி பூசை செய்து வந்தால் யோக பூசை, அறிவானந்தம், தீபம் என்ற மனக்கண் பார்வை, வாசி என்ற அமிர்த பானம், பிரம்ம மய நிலை, மாயை நீங்குதல், நாதவித்து சூட்சுமங்கள், மனக்கண்ணால் தன்னை அறிதல். அட்டாங்க யோகம், மௌன யோகம், அட்டமா சித்துக்கள் ஆகியவை சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment