Saturday, October 4, 2014

அறிவு_2

ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.

No comments:

Post a Comment