Sunday, November 2, 2014

பல்

'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன். ''குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை 'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம். குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும். பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும். சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது. என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும். பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.''

No comments:

Post a Comment