Friday, September 4, 2015

மனிதனை தெய்வமாக பார்த்த விவேகானந்தர் >>>>


இதுதான் இந்தியா என்று உலகுக்கு எடுத்துக்காட்டிய ஒரு வீர இளைஞனின் நினைவு நாள் இன்று/04.07.14… எதற்கும் அடிபணியாத கம்பீரம்… நேர் கொண்ட பார்வை… நிமிர்ந்து நிற்கும் தலைப்பாகை… படத்தை உற்றுப்பார்த்தாலே உள்ளத்தை ஊடுருவும் தீர்க்கமான கண்களுக்கு சொந்தக்காரரான வீரத்துறவி விவேகானந்தருக்குத்தான் இன்று நினைவு நாள்.. வாழ்ந்தது 39 ஆண்டுகள்! அந்த காலகட்டத்துக்குள் ஒட்டு மொத்த உலகத்தையும் தன் பேச்சால், செயலால் உலுக்கி எடுத்து விட்டார்.
இந்த இளைஞனால் மட்டும் எப்படி முடிந்தது? இளைஞர்களே, உங்களை ஒரு அனுமனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கிற என்று பிற்காலத்தில் போதித்த விவேகானந்தர் இளமையிலேயே தனது ஆற்றலை உணர்ந்து கொண்டார்.
1863.. விஞ்ஞானத்தின் புதுமைகள் வராத காலம்! ஆங்கிலேயனுக்கு அடிமைப் பட்டு கலாச்சாரமும் பாரம்பரியமும் நலிந்து கிடந்தது. சாதி உணர்வுகள், மோதல்கள் உக்கிரமாக தலை விரித்தாடியது. இது தான் அப்போதைய இந்தியாவின் நிலை. உலகத்தின் நிலை வேறு விதமாக இருந்தது. அதிகார பலத்தால் என் மதம் தான் உயர்ந்தது என்று நிலை நாட்டும் போட்டியில் இஸ்லாம், கிறிஸ்தவ மார்க்கங்கள் மல்லு கட்டி கொண்டிருந்தன. அந்த நேரத்தில் தான் 1863– ஜனவரி 12–ந் தேதி நரேந்திரநாத் தத்தா என்ற பெயரில் இந்த துருவ நட்சத்திரம் கல்கத்தாவில் உதயமானது.
வாழ்க்கை ஒரு போராட்டம் அதில் போராடி பார் என்பார்கள். நரேந்திரனின் வாழ்க்கையும் போராட்டமாகவே இருந்தது. வறுமையும், பசியும் குடும்பத்தை சூழ்ந்து நின்றது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்ற தவிப்புடன் ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. ஆனால் நரேந்திரனின் உள்ளம் வேறு விதமாக தவித்தது. ஆன்மீகத்தை என்னவென்று அனுபவித்து பார்க்க வேண்டும்? மதம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு உள்ளம் விடை தேடியது.vivegaananthar
இந்த கேள்விகளோடு தான் ராமகிருஷ்ண பரமஹம்சரை அணுகினார். கடவுளை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று நரேந்திரன் எழுப்பிய கேள்விக்கு ஆமாம் என்று அவர் அளித்த பதில் நரேந்திரணை அதிரவைத்தது. குருவின் பக்குவத்தில், பரீட்சையில் கடவுளை உணர்ந்தார். ஆன்மீகத்தில் லயித்தார். வறுமையில் வாடி கிடக்கும் மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். தேச ஒற்றுமையை வளர்க்க வேண்டும். பாரம்பரியமான கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதலோடு துறவறத்தில் ஈடுபட்டார்.
துறவியான பிறகு அவரது பெயர் விவேகானந்தர் ஆயிற்று. மதம் என்பது கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது மட்டும் தான் என்பதை மாற்றி பாமர மக்களுக்கு தொண்டு செய்வது தான் என்ற புதுமையான புரட்சியை உருவாக்கினார். மதத்தை வேதாந்தம் என்ற நிலையில் இருந்து நடைமுறை வாழ்க்கை முறையோடு மாற்றினார். இந்தியாவில் பெரும் மக்கள் நிலை, கலாச்சாரங்களை அறிந்து கொள்ள கால்நடையாகவே பாரத தேசத்தை வலம் வந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது மன்னர்களின் அரண்மனையிலும் தங்கினார். ஏழை மக்களின் குடிசைகளிலும் தங்கினார். திருவனந்தபுரம் வழியாக 1892 டிசம்பர் 24–ந் தேதி கன்னியாகுமரி சென்றடைந்த அவர் அன்னை பகவதி அம்மனை தரிசித்தார். வெயில் சுட்டெரித்த பகல் நேரம்…. ஓங்கி எழுந்த கடல் அலையும்… அதன் நடுவே இருந்த பாறையும் அவரை ஈர்த்தது அந்த பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்ய கடலில் நீந்தி சென்றார்.
தவத்தில் இருந்த விவேகானந்தரின் மனத்திரையில் இந்த உலகிற்கே வழிகாட்டிய பாரத தேசத்தின் பாரம் பரியமும், ஆன்மீக சிறப்புகளும், தற்போது பொலிவிழந்து நிற்கும் காட்சியும் ஒவ்வொன்றாய் விரிந்தது. அதை நினைத்து பூரித்த விவேகானந்தர் இந்த தேசத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல சபதம் ஏற்றார்.
அந்த நேரத்தில் தான் அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாடுக்கு அழைப்பு வந்தது. கையில் காசு இல்லாமல் துறவியாக வலம் வந்த விவேகானந்தரை சென்னை இளைஞர்கள் நிதி திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். நரேந்திரனை தந்தது வங்காளமாக இருக்கலாம். ஆனால் விவேகானந்தரை இந்த உலகுக்கு தந்த பெருமை என்றும் தமிழகத்துக்குத் தான்.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த 400வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கூட்டப்பட்ட உலக சமய மாநாட்டில் தங்கள் சமயம் தான் உலகிலேயே சிறந்தது என்று பறைசாற்ற அமெரிக்கா துடித்து கொண்டிருந்தது. காவி உடையோடு பரம சாதுவாய் எல்லோரும் எள்ளி நகையாடும் பக்கிரியாய் மாநாட்டு அரங்கில் அமர்ந்திருந்த விவேகானந்தரின் இதயம் அன்னை பராசக்தியை தியானித்தது.
அன்னை பாரதத்தின் தலைவிதியை மாற்ற துடித்தது. சீமான்களே, சீமாட்டிகளே என்று உலக தலைவர்களெல்லாம் வார்த்தை ஜாலத்தால் கவர்ந்தார்கள். விவேகானந்தரின் நேரம் வந்தது… சகோதரிகளே, சகோதரர்களே என்று அவரது உள்ளத்தில் இருந்து ஆத்மாத்தமாக உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தையும் அந்த பக்கிரியின் மூலம் பாரத தேசத்தை திரும்பி பார்க்க வைத்தது.vivegaananthar2
எள்ளி நகையாடிய தேசம் அவரை போற்றி புகழ்ந்தது. பல நகரங்களில் இந்திய கலாச்சார பெருமைகளை, ஆன்மீகத்தின் தத்துவங்களை தனது தீர்க்கமான உரையால் மேலை நாடுகளில் பரப்பினார். மேலை நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு திரும்பும் போது விவேகானந்தரிடம் எங்கள் நாட்டு சிறப்புகளை பார்த்து விட்டீர்களா? இப்போது உங்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதும் புன்னகையுடன் ‘இது வரை என் நாடு புனிதமான நாடு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் என் தேசத்தின் ஒவ்வொரு துகளும் புனிதமானது என்று உணர்கிறேன்’ என்றார்.
இதைவிட நாட்டுப்பற்றுக்கு வேறு என்ன வேண்டும். இந்தியா திரும்பிய போதும் ராமநாதபுரம் மண்ணில் இறங்கியதும் தரையில் விழுந்து பாரத தேசத்தை வணங்கினார் அந்த நவ பாரத சிற்பி. பல நதிகள் கடலில் சங்கமமாவது போல உலகில் இருக்கும் எல்லா மதங்களும் இறைவனை சென்றடையும் மார்க்கங்களே!
உலகில் துன்பப் படுவனுக்காக துயரப்படு பவனுக்காக வாழுங்கள். பிறருக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் வாழ்ந்தாலும் செத்தற்கு தான் சமம்! மனிதன் கடவுளுக்காக கோவில் கட்டினான். ஆனால் கடவுள் தனக்காக கட்டிய கோவில் தான் மனித உடல் எனவே மக்களுக்கு சேவை செய்யுங்கள். சுயநலம் என்பதை அறவே ஒழித்து விட்டு சேவை செய்யுங்கள் ‘இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர் சக்கரத்தை கிளப்புவதற்கு உங்கள் தோள்களை கொடுங்கள்’ நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாக திகழுங்கள் என்று இளைஞர்களை தட்டி எழுப்பிய விவேகானந்தர் எழுமின்! விழிமின்! கருதிய கருமம் என கூடும் வரை நில்லாது உழைமின்! என்று அறைகூவல் விடுத்தார்.
விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் தமிழக இளைஞர்கள் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து இருந்தார். இதை அவரது சென்னை சொற்பொழிவுகளில் தெரிந்து கொள்ள முடிகிறது. தியாக உள்ளம் கொண்ட இளைஞர்கள் நாட்டுக்காக உழைப்பார்கள். உங்களிடம் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறேன். அரை குறையாக எனது பணிகளை விட்டு செய்கிறேன். சிங்கம் போல் சீறி எழுந்து என் அருமை இளைஞர்கள் செய்து முடிப்பார்கள் என்று தனது நம்பிக்கையை வெளியிட்ட அந்த வீரத்துறவி இன்று நம்மிடம் இல்லை.
அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ளன. சிகாகோ மாநாட்டின் நிறைவில் அவர் கூறும்போது, ‘இந்த மாநாட்டின் துவக்கத்தில் ஒலித்த மணி ஒலி உலகில் உள்ள மத தீவிரவாதத்துக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாக இருக்கட்டும்’ என்று வேண்டுகோள் விடுத்ததை அவரது இந்த நினைவு தினத்தில் இதயத்தில் கொள்வோம். உலகை அன்பால் வெல்வோம்.
காளியிடம் விவேகானந்தர் கேட்ட வரம்
விவேகானந்தர் வீட்டை வறுமை வாட்டி வதைத்தது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். அப்போது அவரது நண்பர்கள் ‘நீ, பரமஹம்சரின் சிஷ்யன் தானே. அவர் கேட்டால் காளி செல்வங்களை அள்ளி கொடுப்பாள். கேட்க சொல்’ என்று வற்புறுத்தினார்கள். விவேகானந்தரும் அப்படியே தனது குருநாதரிடம் சென்று எனது குடும்ப வறுமையை போக்க காளியிடம் பணம் தர சொல்லுங்கள் என்றார். ஆனால் ராமகிருஷ்ணர் ‘பணம் உனக்குத் தானே தேவை. நீயே காளியிடம் போய் கேள் நான் உனக்காக கேட்க முடியாது என்று கூறி விட்டார்.
கோவிலுக்குள் சென்ற விவேகானந்தரோ ‘தாயே, எனக்கு ஞானத்தை கொடு’ என்று மட்டும் கேட்டு திரும்பினார். வெளியே வந்ததும் ராமகிருஷ்ணர் ‘என்ன, காளியிடம் பணம் கேட்டாயா?’ என்று கேட்டார். கேட்க முடியவில்லை ஞானம் தான் கேட்டேன் என்றார். அதை கேட்டதும் மறுபடியும் கோவிலுக்குள் அனுப்பி தேவையானதை கேள் என்றார். அப்போதும் ‘ஞானத்தை கொடு, உன் அருளை கொடு’ என்று மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.


No comments:

Post a Comment