செங்கடுக்காய் கற்பம்
சித்த மருத்துவத்தில் மகத்துவமான மூலிகைகளில் கடுக்காயும் ஒன்று. இது மரவகையைச் சேர்ந்தது. இந்த மரங்கள் உள்ள நிலம், அதன் தன்மை மற்றும் அதன் காயின் வடிவத்தைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் என பலவகைகளாக கூறப் பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. செங்கடுக்காய் கற்பம் ஒன்றினை செய்திடும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஒரு புத்தகமாய் தொகுக்கக் கூடிய அளவில் ஏராளமான எளிய கற்பவகைகளை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த கற்பம் கொஞ்சம் சிக்கலான, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சிக்கலான தயாரிப்பு முறையினைக் கொண்டது. இந்த கற்ப முறையில் விஷத்தன்மை உடைய பாதரசம் பயன்படுத்தப் படுவதால் தயவு செய்து யாரும் இதனை பரிட்சித்து பார்க்க வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
இந்த கற்பமுறை அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
இருக்கவே புலஸ்தியனே யின்னங்கேளு
யெழிலான காயாதி கற்பஞ்சொல்வேன்
பொருக்கவே பூவுலகில் கோடிகாலம்
பொங்கமுடன் யிருப்பதற்கு வுறுதிசொல்வேன்
நிருத்தமுடன் செங்கடுக்காய் சேர்தான்ரெண்டு
நிலையான சூதமது சேர்தானொன்று
திருத்தமுடன் மலைத்தேனி லூறவைத்து
திகழுடனே பூமிதனில் புதைத்திடாயே.
புதைக்கவே மண்டலமு மூன்றுசென்றால்
புகழான செங்கடுக்காய் சூதமுண்டு
சிதைத்துமே தேனதுவும் பொசித்துமேதான்
சிறப்பான மெழுகதுபோ லாகும்பாரு
விதையான கடுக்காயுஞ் சூதஞ்சேர்ந்து
வீறான காயகற்பம் மெழுகதாச்சு
சதையான செங்கடுக்காய் கற்பமாகி
தன்மையுள்ள தேகமது கற்றூணாமே.
கல்லான தூணதுவுங் கடுக்காய் தன்னால்
காயாதி கற்பமதுக் குறுதியாச்சு
வல்லான காயமது கொண்டபோது
வரைகோடி திறைகோடி யிருக்கலாகும்
புல்லான தேகமது கற்றூண்போலே
புகழான வாசியது கீழ்நோக்காகும்
நல்லதொரு காயமதைக் கொண்டபோது
நரைதிரையும் நாயகனே யில்லைகாணே.
வருகவே தேகமது தங்கம்போலாம்
வண்மையுள்ள செங்கடுக்காய் காயகற்பம்
ஒருவருமே யறியார்க ளிந்தபாகம்
ஒகோகோ சித்துமுனி கண்டதில்லை
திருவருளின் மனோன்மணியின் கடாட்சத்தாலே
திறமான காயகற்பஞ் சொன்னேனப்பா
கருவறிந்து வுளவறிந்து கருத்தாயுண்டு
காசினியில் கோடிவரை யிருக்கலாமே.
கடுக்காயின் நடுவே உள்ள கொட்டை பகுதி நஞ்சு என்பதால் அதனை நீக்கி விட்டு சதைப் பகுதியை மட்டுமே கற்பம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட செங்கடுக்காய் இரண்டு சேர் அளவும், சுத்தி செய்யப்பட்ட பாதரசம் ஒரு சேர் அளவும் எடுத்து அவற்றை ஒரு மட்பாண்டத்தில் இட்டு அது மூழ்கும் வரையில் மலைத்தேன் விடவேண்டுமாம். பின்னர் இந்த மட் பாண்டத்தின் வாயினை நன்கு மூடி சீலைமண் செய்து நிலத்தில் புதைத்துவிட வேண்டும் என்கிறார்.
மூன்று மண்டல காலம் நிலத்தில் புதைத்து வைத்து பின்னர் எடுத்தால், பாதரசமும் கடுக்காயும் சேர்ந்து மெழுகு போல் ஆகியிருக்குமாம். இந்த மெழுகினை காயகற்ப மெழுகு என்கிறார் அகத்தியர். பின்னர் இந்த மெழுகினை உண்டு வந்தால் நரை திரை நீங்கி, உடல் கற்தூண் போல் உறுதியாக இருப்பதுடன் உலகில் இறுதிக் காலம் வரை வாழலாம் என்கிறார்.
இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.
ஒரு மண்டலம் - 48 நாட்கள். மூன்று மண்டலம் -144 நாட்கள்.
எட்டு பலம் = ஒரு சேர். ஒரு பலம் 35 கிராம்.
சித்தர்கள் இராச்சியம்..
No comments:
Post a Comment