விஷக் கடி வைத்தியம்
பாம்பு, தேள், பூரான், தேனீக்கள், வண்டுகள், எலி போன்ற உயிரினங்கள் தீண்டினால் நம் உடலில் பரவும் விஷத்தை முறிக்கவும், அதன் தீவிரத்தைக் குறைக்கவும் பல்வேறு வகயான எளிய தீர்வுகளை நம் முன்னோர்கள் கைக் கொண்டிருந்தனர். இது தொடர்பில் முன்னரே சில தகவல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையின் இன்று அகத்தியர் அருளிய மருந்தொன்றினைப் பற்றி பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....
வேமப்பா விஷங்களுக்கும் குழம்பு கேளு
வேப்பம்முத்து ரசகெந்திது ருக வெள்ளை
வெள்லையோடு மனோசிலையும்பெருங் காயமேழு
மேன்மையாய் வகைக்கரைக்க ழஞ்சு கூட்டி
தள்ளையென்ற நேர்வாளஞ் சுத்தி செய்து
தருவாகக் கழஞ்சதுவு மேழு மொன்றாய்
வள்ளவே கல்வத்திலிட் டெருக் கம்பால்
மாட்டியரை ஒருசாமமெ ழுகு போல
துள்ளவே பின்புநிம்ப நெய்தான் விட்டுத்
துருசாக வொருசாமம ரைத்துக் கேளே.
அரைத்துமதைக் கொம்புச்சிமிழ் தன்னில் வைத்து
அப்பனே விஷந்தீண்டி வந்த பேர்க்கு
திறத்துடனே பயிறளவுவெற்றி லையில் லீய்ந்து
தீர்க்கமுடன் கடிவாயிற் கொஞ்சம் பூச
பறந்துவிடுஞ் சகலவிஷம் போகு மென்று
பரமனது வடமொழிநூல் பாக மப்பா
உரைத்துவிட்டேன் பத்தியத்தான்ப சுமோ ராகும்
உத்தமனே சந்நிக்குக லிக்கங் கேளே.
வேப்பம் முத்து, ரசம், கெந்தகம், துருசு, வெள்ளைப் பாடாணம், மனோசிலை, பெருங்காயம், ஆகியவற்றை வகைக்கு அரைக்கழஞ்சு அளவு எடுத்து, அதனுடன் சுத்தி செய்த நேர்வாளம் ஏழு கழஞ்சு சேர்த்து, இந்த கலவையை கல்வத்திலிட்டு, எருக்கம்பால் சேர்த்து ஒரு சாம நேரம் அரைக்க கலவையானது மெழுகு பதத்தில் வருமாம். அப்போது அதில் வேப்பெண்ணெய் விட்டு மேலும் ஒரு சாமம் அரைத்து எடுத்த மருந்தினை, கொம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மருந்து கெட்டியான மெழுகு பதத்தில் இருக்கும்.
எந்தவகையான விஷக் கடியாக இருந்தாலும், நாம் சேமித்து வைத்த மெழுகில் இருந்து பயறு அளவு எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து மடித்து பாதிக்கப் பட்டவரிடம் உண்னக் கொடுக்க வேண்டுமாம். பிறகு அந்த மெழுகில் இருந்து சிறிதளவு எடுத்து கடிவாயிலும் பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!
இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் பசு மோரை நீக்க வேண்டும் என்கிறார்.
ஆர்வமும், வாய்ப்பும் உள்ளவர்கள், காலத்தே மறைந்து போன இது போன்ற நம் மருத்துவ முறைகளைப் பற்றி மேலதிக ஆய்வு செய்திடலாம்.
No comments:
Post a Comment