வணக்கம்
தன்னளவில் அமைதி பெற்ற மனிதன்
•தான் வாழும் சமூகத்தோடு அமைதி பெற்ற மனிதன்
•தன்னைப் படைத்த இறைவனோடும் அமைதி பெறுவதன் மூலமே முழுமையான அமைதியைப் பெற முடியும்.
•அமைதிக்கு வழிகாட்டிய ஆண்டவனை மறந்துவிட்டு அமைதி அடைய முடியாது.
•நம்மை அழகிய உருவில் படைத்து சிந்திக்கும் ஆற்றலை வழங்கி, நமக்குப் பயன்படும் விதத்தில் இயற்கையை அமைத்து வாழ்வாதாரங்களை வழங்கி வரும் இறைவனை நினைவு கூராமல் மனிதன் அமைதி அடைய முடியாது.
இறைவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இறைவனுடன் அமைதி பெற முடியாது. இறைவனின் விருப்பம் நமது விருப்பமாகவும் இறைவனின் வெறுப்பு நமது வெறுப்பாகவும் ஆகாதவரை இறைவனுடன் அமைதி பெற முடியாது. இரண்டு நபர்களின் சிந்தனை, விருப்பு, வெறுப்பு,எதிர்பார்ப்பு ஒரே மாதிரியாக அமைந்து விடும்போதுதான் நெருக்கமான நண்பர்களாகி விடுகின்றனர். அதைப் போலவே நாமும் இறைநேசர்களாய் ஆக வேண்டுöமனில் இறைவனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
முதலில் இறைவனை உள்ளது உள்ளவாறு உணர வேண்டும். கூடுதல் குறைவின்றி, மிகைப்படுத்தலின்றி, கற்பனை கலவாமல் இறைவனை ஏற்க வேண்டும். இறைவனைப் பற்றி இறைவனே நமக்குச் செய்திகளை அறிவிக்கின்றான். “நான் ஒருவன். எந்தத் தேவைகளும் அற்றவன். நான் யாரையும் பெறவில்லை.யாராலும் பெறப்படவுமில்லை. எனக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. என்னை மிகைத்து எந்தச் சக்தியும் இல்லை.
இறைவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். ஒரு நிறுவனத்திற்கு, ஒரு நாட்டிற்கு, ஓர் இராணுவத்திற்கு இரண்டு தலைமை இருந்தால் குழப்பம் விளைவது போல் ஒரு பிரபஞ்சத்திற்கு இரண்டு தலைமைஇருந்தால் குழப்பமே மிஞ்சும்.
“வானத்திலும் பூமியிலும் இறைவன் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்” என்று திருமறை கூறுகிறது.
இந்தப் பிரபஞ்சம் குழப்பமின்றி சீராகச் செயல் படுவதிலிருந்து இறைவன் ஒருவன் என்பது உறுதியாகிறது. எனவே இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; துணையில்லை; பால் இல்லை; பன்மையில்லை என்பது இறைவனுடன் அமைதி பெறுவதற்கான முதல் படியாகும்.
இறைவன் ஒருவன் என்று ஏற்றுக் கொண்டபின் அவனை மட்டும் வணங்குவதே அவனுடன் அமைதி பெறுவதற்கான அடுத்த படியாகும். ‘படைத்தவனை வணங்கு; படைப்புகளை வணங்காதே!’ என்பது இறைக்கட்டளையாகும். படைத்தவனை விடுத்து அவனால் படைக்கப்பட்ட மனிதர்களை, உயிரினங்களை, உயிரற்ற பொருள்களை வணங்குவதும் அவற்றிடம் பிரார்த்தனை புரிவதும் அவற்றுக்காக நேர்ச்சை காணிக்கை செய்வதும் இறைவனுக்கு வெறுப்பைத் தரும் செயல்களாகும். எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவனே வணங்குவதற்கு தகுதி படைத்தவன்.
தமது தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் பிறரைச் சார்ந்திருக்கும் படைப்புகளை வணங்குவது படைத்தவனுக்குச் செய்யும் அநீதியாகும். அறிவுக்குப் புறம்பான செயலுமாகும்.
ஏக இறைவனை வணங்குவதோடு அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியும்போதுதான் இறைதிருப்தி முழுமையாகக் கிட்டும்.
வணக்கத்திற்கு இறைவன், கீழ்ப்படிவதற்கு மனிதன், மன இச்சைகள், மூதாதையர்கள் என்று செயல்படுவது முரண்பாடான போக்காகும்.
ஒரு பொருளைக் கண்டுபிடித்து அதனைத் தயார் செய்தவனே அப்பொருளை இயக்கும் முறையைச் சொல்லித் தரமுடியும். மனிதனைப் படைத்து அவனுக்குப் புலன்களையும் ஆற்றல்களையும் வழங்கிய இறைவனே மனிதனின் இயற்கை, பலம் பலவீனம் ஆகியவற்றைத் துல்லியமாக அறிவான்.
எனவே அவன் வகுத்தளிக்கும் கோட்பாடுகள், நெறிமுறைகள் எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சமூகங்களுக்கும் ஏற்றவையாக அமைந்திருக்கும். இன, மொழி, நாடு, வர்க்கம், பால் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.
“இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான், படைக்கும் ஆற்றலும் கட்டளை பிறப்பிக்கும் ஆற்றலும் அவனுக்குரியவையே.”
“இறைவன் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுகிறான். ஆகவே சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவன் பின்பற்றத்தகுந்தவனா அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி தானாக நேர்வழியைப் பெற முடியாதவன் பின்பற்றத்தகுந்தவனா?” என்ற இறைவாக்குகள் படைத்தவனுக்கே வழிகாட்டும் ஆற்றல் உண்டு என்பதை உணர்த்துகின்றன.
இறைவனை வணங்கி, அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதோடு அவனை அடிக்கடி நினைவு கூர வேண்டும். இறைவனின் பண்புகள், வல்லமை, ஆற்றல்கள், அருளிய அருட்கொடைகள் ஆகியவற்றை அடிக்கடி நினைவுகூர்ந்து அவனைப் பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் நன்றி தெரிவித்தும் வரவேண்டும்.
•நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நினைக்கிறபோது மனம் அமைதி பெறுகிறது.
•நமது கல்விக் கண்ணைத் திறந்து விட்ட ஆசிரியர் பெருமக்களையும் அறிஞர்களையும் நினைவுகூர்வதால் நமது உள்ளம் அமைதி பெறுகின்றது.
•இக்கட்டான கால கட்டங்களில் இடுக்கண் களைந்த நல்லோர்களை எண்ணிப் பார்ப்பதில் மனத்தில் மகிழ்சசி உண்டாகின்றது.
அது போலவே ‘இறைவனை நினைவுகூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன’
நம்மை அழகிய உருவில் படைத்து, படைப்புகளில் சிறந்தவர்களாய் ஆக்கி ஆற்றல்களையும் வாழ்வாதாரங்களையும் வழங்கிய இறைவனை நினைவுகூர்வதால் உள்ளம் அமைதி பெறும்.
‘இறைவன் மிகப் பெரியவன்’
‘இறைவன் மிகத் தூய்மையானவன்’
‘இறைவனுக்கே எல்லாப் புகழும்’
‘ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை’
என்பன அடிக்கடி நிணிக்அகூரத்தக்க சொற்களாகும். இவை மந்திரச் சொற்களல்ல. உள்ளத்திற்கு அமைதி தரும் சொற்களாகும்.
“இறைவன் மிகப் பெரியவன்” என்றால் இறைவனுக்கு முன் நான் ஒன்றுமில்லை என்று பொருள். இதனைப் புரிந்து கொண்டவர்கள் ஆணவத்திலிருந்து விடுபட்டு அமைதி பெறுவார்கள்.
“இறைவனுக்கே எல்லாப் புகழும்’‘ என்பது எல்லாச் சிறப்புக்கும் சொந்தக்காரன் இறைவனே. என்னிடமுள்ள அறிவு,செல்வம், வீரம் அனைத்தையும் வழங்கியவன் அவனே. இதனைப் புரிந்து கொண்டால் ஆணவம், பொறாமை, பெருமை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று அமைதி பெறுவர்.
எனவே இறைவனை நினைவுகூர்வதால் நம் வாழ்விலும் அமைதி பெறலாம், இறைவனோடும் அமைதி பெறலாம்.
No comments:
Post a Comment