Wednesday, September 17, 2014

அகத்தியர்

அரு மருந்தாகும் தூதுவளை லேகியம்
சமஸ்கிருத மொழியில் உள்ள அவலேஹம் என்கிற சொல்லே நாளடைவில் மருவி 'லேகியம்' என்றானது. தூய தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பதே சரியானது. பொதுவில் லேகியம் என்பவை தண்ணீரைப் போலவோ, அல்லது குழம்பு போலவோ இல்லாமல் கெட்டியான நீர்ம நிலையில் இருக்கும். நோய் தீர்க்கும் இந்த இளகங்களைப் பற்றி நம் முன்னோர்கள்  அருளிய பல்வேறு முறைகளை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தூதுவளை லேகியம் பற்றி பார்ப்போம்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. பாடல் பின்வருமாறு....

பூரணமா மின்னமொரு லேகி யங்கேள்
புலத்தியனே நானூற்றில்பு னித மாக
காரணமா முருங்கைப்பூதூது வளம் பூவும்
கணக்காக வகைக்குநால் பலம் நிறுத்து
தாரணியில் சதாவேரிக்கி ழங்கு மூணு
தருவான நன்னாரிவேர்ப லமி ரண்டு
காரணமாய் நிலப்பனையுநெ ருஞ்சி முள்ளும்
கருவாக வகைக்கொருப லமாய்க் கூட்டே.

கூட்டியே சூரணித்துப்ப சுவின் பால்தான்
குறுணியிலே போட்டுமேகு ழம்பு போலே
காட்டியே வற்றிவரும் போது மைந்தா
தருவான சீனிபலம்பண்ணி ரெண்டும் போட்டு
காட்டியே கிளரயிலேப சுவி நெய்தான்
நலமாகப் படியரைத்தேனு ழக்கு விட்டு
கெட்டியாய் லேகியம்போற் கிண்டி வாங்கிக்
கிருபையுள்ள கணபதியை வணங்கே

செய்துமே தான்றிக்காயளவு கொள்ளத்
தீருகிற வியாதிதனைத் திறமாய்க் கேளு
எய்துகின்ற பிரமியமு மேக நோயும்
இன்பமுள்ள எலும்புருக்கிப்பி ரமே கந்தான்
பெய்துமே மண்டலத்திற் றீர்ந்து தானும்
பெலமுண்டா யிந்திரியபெ லமுண் டாகும்
செய்துமே லேகியத்தில்மே கநோ யெல்லாந்
தீருமடா பத்தியமோ யில்லை பாரே.

முருங்கைப்பூ, தூதுவளைப்பூ  ஆகியவற்றில் தலா நான்கு பலம் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். (ஒரு பலம் என்பது தற்போதைய அளவைகளின் படி சுமார் 35 கிராம் ஆகும். ). இந்த பூக்களுடன்  தண்ணீர்விட்டான் கிழங்கு மூன்று பலம், நன்னாரிவேர் இரண்டுபலம், நிலப்பனைகிழங்கு, நெருஞ்சிமுள் ஆகியவைகளை தலா ஒரு பலம் சேர்த்து கொள்ள வேண்டுமாம். அந்த கலவையைச் சுத்தி செய்து இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டும் என்கிறார். 

இந்த சூரணத்துடன், ஒரு குறுணி அளவு பசும்பால் கலந்து அடுப்பில் வைத்து எரித்தால் பால் கொதித்து குழம்புபோல் நன்கு சுண்டி வருமாம். அந்த சமயத்தில் அதில் பன்னிரெண்டு பலம் சீனி சர்க்கரையும்,  அரைப்படி பசுநெய்யும், ஓர் உழக்கு தேனையும் சேர்த்துக் நன்கு கிளறி  எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

சேமித்த லேகியத்தில் தான்றிக் காயளவு எடுத்து அதனை காலை மாலை என இரு வேளையும் தொடர்ந்து நாற்பத்தி எட்டு  நாட்கள்  உண்டுவர பிரமியம், எலும்புருக்கி, பிரமேகம், மேக நோய்கள் அனைத்தும் குணமாகுமாம். அத்துடன் இந்திரிய பலமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

* பிரமியம் என்பது விந்து  அடைப்பு, விந்து ஒழுக்கு , விந்து நீர்த்துப் போதல் போன்ற குறைபாடுகளைக் குறிக்கும் பொதுச் சொல்.

* பிரமேகம் என்பது பல்வேறு உடல் நோவுகளைக் குறிக்கும் பொதுச் சொல். சித்த மருத்துவத்தில் 21 வகையான பிரமேகம்  உள்ளது. 

* மேக நோய் என்பது "சிபிலிஸ்" எனும் பாலியல் நோயைக் குறிக்கும்.

* சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி அல்லது நெருப்பில் வறுத்து பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர். 

No comments:

Post a Comment