உலகிலேயே மிகப் பழையதாகக் கருதப்படும் ஜப்பானிய ஜோமோன் மட்பாண்டம்.
கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. கற்கருவிகள் பலவகையான கற்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப் பிந்திய கற்காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவுகளைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.
இது, மனிதனிடைய கூர்ப்பில் (பரிணாமம்), முதன் முதலாகத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். கிழக்கு ஆபிரிக்காவின் சமவெளிகளிலிருந்து மனிதர் உலகின் ஏனைய இடங்களுக்குப் பரவியதும் இக் காலப்பகுதியிலேயே. இது வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, செப்புத் தாதுக்களிலிருந்து செப்பின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. இக்காலத்தில் மனிதர்கள் எழுத அறிந்திருக்கவில்லை என்பதால் எழுதப்பட்ட வரலாறு கிடையாது. எனவே இக்காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகின்றது.
கற்காலம் என்னும் சொல், இப் பரவலான காலப் பகுதியைக் குறிப்பதற்காக தொல்லியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. அழியக்கூடிய பிற மென்மையான பொருட்களால் செய்யப்பட்டவற்றைக் காட்டிலும், கற்களால் செய்யப்பட்ட கருவிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அழியாமல் இருக்கின்றன. தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலமாகும்.
கற்காலத்தை முந்திய பகுதியாகவும், பிந்திய பகுதியாகவும் பிரிக்கவேண்டும் என 1851 ஆம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவராவார். இன்றும் பயன்பாட்டில் உள்ள, கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865 ஆம் ஆண்டில், அவர் எழுதிய வரலாற்றுக்கு முந்திய காலங்கள் (Pre-historic Times) என்னும் அவரது நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடுகின்றன.
No comments:
Post a Comment