Thursday, December 18, 2014

மார்கழி மகிமை பற்றி தெரியுமா?

மார்கழியில் ஏன் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை?
மார்கழி மாதத்தை பீடை மாதம்என்று சொல்வது மூடநம்பிக்கை. மார்கழி மாதம் முழுவதுமே கடவுளை வழிபடும் மாதமாக நமது மரபில் அனுசரிக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்பதாலேயே மார்கழி மாதத்தில் மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. திறக்காத திருக்கோயில்களும் திறந்திருக்கும் ஒரே மாதம் மார்கழி மாதம். வருடம் முழுக்க உணவுக்கு தேவைப்படும் உளுந்தையும், நெல்லையும் உழவர்கள் சேகரித்து வைக்கும் மாதம் இது. கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் ஆகியவற்றை சேமிக்கவே மாதம் முழுக்க செலவாகிறது என்பதால்தான் இம்மாதத்தில் மங்கல நிகழ்வுகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். அந்த சேகரிப்புப் பணி முடிந்ததுமேதான் தைத் திருநாளை விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.
சைவர்கள், வைணவர்கள் இருவருக்குமே பொதுவான மாதமாக இது இருக்கிறதே?
சிவபெருமான் நஞ்சுண்டதை தடுத்து, அது கழுத்திலேயே தங்கி விட்டதால் திருநீலகண்டர் ஆனார். அவரது நீண்ட ஆயுளுக்காக திருவாதிரை விரதம் என்பது ஒரு சடங்கு. திருவாதிரை மார்கழியில்தான் வருகிறது. சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்திருவாதிரை அன்றுதான் நடக்கிறது. திருவாதிரை நட்சத்திரத்தில்தான் வியாக்கிர பாதருக்கும், பதஞ்சலிக்கும் தன் திருநடனத்தை ஆடி காண்பித்தார் நடராஜர். போலவே திருமாலும் அறிதுயல் கெடுத்து கண் விழிக்கும் வைகாதசியும் இதே மாதம்தான். மாதங்களில் அவள் மார்கழிஎன்று கண்ணதாசன் எழுதிய பாடலேகூட, அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்ன விளக்கத்திலிருந்து பெறப்பட்டதுதான். மாதத்தில் நான் மார்கழிஎன்று கண்ணன் சொல்கிறார். எனவே இருதரப்பினருக்கும் இது முக்கியமான மாதம். சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடுவார்கள். திருப்பதி கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதம் பாடுவதற்குப் பதிலாக திருப்பாவை பாடுவார்கள்.
மார்கழியில் ஆந்திராவிலும் திருப்பாவை பாடுகிறார்களாமே?
ஆமாம். திருப்பதியில் பாடப்படுவதால் திருப்பாவையின் முக்கியத்துவம் ஆந்திரா (இன்றைய தெலுங்கானா, சீமாந்திரா) முழுக்க பரவியிருக்கிறது. ராமானுஜர் செய்த ஒழுங்கு இதுவென்றும் சொல்வார்கள். தேமதுரத் தமிழோசை சுந்தரத் தெலுங்கு பேசப்படும் தேசமெங்கும் மார்கழியில் ஒலிப்பது தமிழராய் நமக்கு பெருமைதான். அங்கிருக்கும் கோயில்களில் திருப்பாவை பாடப்படுவது மட்டுமில்லாமல், அது குறித்த விளக்கத்தையும் தெலுங்கில் தருகிறார்கள்.
அறிவியல் ரீதியாக மார்கழியின் முக்கியத்துவம் என்ன?

மார்கழி காலைகள் ஓசோன் நிரம்பியதாக இருக்கும் என்பது அறிவியல். இதை சுவாசிக்கும் போது நுரையீரல் புத்துணர்ச்சி பெறும். அதன் அடிப்படையில்தான் அதிகாலையில் எழுந்து பாடல்களை பாடுவதும், வாசலில் கோலமிடுவதும் என்கிற வழக்கம் வந்தது. நம்முடைய பண்பாடு என்பது அறிவியலோடு இணைந்ததுதான். காரண காரியமின்றி யாதொரு சடங்கும் நடப்பதில்லை.

No comments:

Post a Comment