தாராலிங்கம்..!
சிவலிங்கங்களில் பலவிதங்கள் உள்ளதுபோல், பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை "தாராலிங்கம்' என்று கூறப்படுகின்றன.
காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள், தென்னாற்காடு மாவட்டம் பனைமலையில் உள்ள சிவன் கோவில், பொன்பரப்பி சிவன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் போன்ற ஆலயங்களின் வளாகத்திலும் தாராலிங்கங்கள் உள்ளன.
தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைத்திருப்பார்கள்.
நான்கு பட்டைகள் கொண்ட லிங்கங்களை "வேதலிங்கம்' என்று போற்றுவர். சக்கரப்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் மூலவர் நான்கு பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். கோவை காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை சர்வதோபத்ரதாரா லிங்கம் என்பர்.
எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச்செயல்களையும் குறிப்பன என்பர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசை லிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்களாகும்.
பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். இவ்வகை லிங்கங்கள் குளிர்ச்சியான கல்லில் உருவானவையாகும். பெரும்பாலும் சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக இருக்கும். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்திலும், பழையாறை மேற்றளியிலும், பொன்பரப்பி தலத்திலும், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கோவிலிலும் சோடச தாராலிங்கம் உள்ளது.
முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர். காஞ்சியம்பதியில் 32 பட்டைகள் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.
64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத் திருவுரு- கலைகள், சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள், 64 யோகியர்களைக் குறிக்கும் என்பர்.
இவ்வகை லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம். மேலும், அறுபத்து நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம் பைரவரையும் குறிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.
பொதுவாக தாராலிங்கங்களை வழிபடுவதால், இறைவனின் பூரண அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும் என்றும் சொல்வர். எனவே இதை சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர்.
இந்தத் தாராலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் தாரைகளின் வழியே பிரிந்து செல்லும் காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின் முழுமையான அருளைப் பெற்று வளமுடன் வாழலாம் என்பர்.
No comments:
Post a Comment